கோவையில் சாலையின் நடுவே ஏற்பட்ட பெரிய பள்ளம் – பொதுமக்கள் அதிர்ச்சி
கோவை உப்பிலிபாளையம் அருகே சாலையின் நடுவே ஏற்பட்ட பெரிய பள்ளத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை சிங்காநல்லூரை அருகே உள்ள உப்பிலிபாளையம் பகுதியில் பாதாளச் சாக்கடை பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததாலும், அதே இடத்தில் குடிநீர் இணைப்பு குழாயில் ஏற்பட்ட உடைப்பைச் சரி செய்யாததும் மண்ணரிப்பு ஏற்பட்டு பள்ளம் உண்டாகக் காரணம் என அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர்.
நல்வாய்ப்பாகச் சாலைப் போக்குவரத்து மிகுந்த அந்த சாலையில் பள்ளம் ஏற்பட்டபோது வாகனம் எதுவும் செல்லாததால் அசம்பாவிதங்கள் நிகழவில்லை.
இந்த நிலையில் தகவல் அறிந்து விரைந்த மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தை மூடி குழாய் உடைப்பைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள், 24 மணி குடிநீருக்கான சூயஸ் திட்டம் போன்றவற்றிற்குச் சாலைகளின் நடுவே தோண்டப்படும் குழிகள் சரிவர மூடப்படுவதில்லை என்கின்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது.
மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் அஜாக்கிரதையாகச் செயல்படும் ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்