G Pay மூலம் 112 பேரிடம் பணம் மோசடி செய்த காதல் தம்பதி கைது..!
கோவையில் ஜி.பே. மூலம் பணம் அனுப்பி விட்டதாகக் கூறி 112 பேரிடம் நூதன முறையில் மோசடி செய்த காதல் தம்பதியை போலீசார் கைது செய்த சிறையில் அடைத்தனர்.
கோவை தெலுங்குபாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(54). இவர் சங்கனூர் – நல்லாம்பாளையம் ரோட்டில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். கடந்த 15-ஆம் தேதி மதியம் 3 மணிக்குக் கடை வியாபாரம் முடிந்ததும் கடையைச் சுத்தம் செய்து, கடையை மூடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.
அப்போது கடை முன்பு ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி சக்திவேலிடம், நாங்கள் பக்கத்தில் உள்ள மருத்துவமனை வந்தோம். ஏ.டி.எம் கார்டு வேலை செய்யவில்லை. தற்போது மருத்துவமனை சிகிச்சை பெற அவசரமாக ரூ.2 ஆயிரம் தேவைப்படுகிறது.
உங்களிடம் கையில் இருக்கும் பணத்தைக் கொடுத்தால், நாங்கள் உங்களுக்கு செல்போன் மூலமாக ஜி.பே அனுப்பி விடுகிறோம் எனத் தெரிவித்தனர். அவசரம் எனக் கூறியதால் சக்திவேலும் அவர்கள் கூறியதை உண்மை என நம்பினார். உடனே ரூ.2 ஆயிரம் பணத்தை எடுத்து அந்த தம்பதியிடம் கொடுத்தார்.
அதனை வாங்கி கொண்ட அவர்கள், ஜி.பே மூலம் உங்களிடம் வாங்கிய பணத்தை அனுப்பி விட்டோம் என செல்போனை சக்திவேலிடம் காண்பித்தனர். அவரும் பணம் வந்துவிட்டது என நினைத்துக் கொண்டார். தொடர்ந்து அவர்கள் இன்னும் ரூ.2 ஆயிரம் தேவைப்படுகிறது.
நீங்கள் தந்தால் இப்போது அனுப்பியபடியே நாங்கள் பணத்தை அனுப்பிவிடுவோம் என்றனர். அவரும் முதலில் பணம் வந்துவிட்டது என நினைத்துக் கொண்டதால் அவர்கள் கேட்ட மேலும் ரூ.2 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொடுத்தார்.
அவர்கள் மறுபடியும் அதேபோன்று ஜி.பேவில் அனுப்பி விட்டோம் என செல்போனை காண்பித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு சக்திவேல் தனது வங்கிக் கணக்கைச் சரிபார்த்த போது, தனக்கு அப்படி எந்தவொரு பணமும் ஜி.பே மூலமாக வரவில்லை என்பதைத் தெரிந்து கொண்டார்.
அந்த தம்பதி தன்னை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு ரூ.4 ஆயிரம் வாங்கி சென்றதை அறிந்ததும் அவர் அதிர்ச்சியானார். உடனே அவர் சம்பவம் குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்த போது இது போல் மேலும் பலர் பணத்தை இழந்தது தெரியவந்தது.
மோசடியில் ஈடுபட்ட இந்த தம்பதியைப் பிடிக்கக் காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் ஆய்வாளர் வெற்றிச்செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா மூலம் இரு சக்கர வாகன பதிவெண்ணைக் கண்டறிந்து. இந்த மோசடி தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் பிடிபட்ட தம்பதி சுகுணாபுரம் பழைய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது ரிஸ்வான்(21), அவருடைய மனைவி சர்மிளா பானு(20) என்பதும், இவர்கள் 2 பேரும் நீண்ட நாட்களாகக் காதலித்துக் கடந்த 1½ மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதேபோல் மொத்தம் 112 பேரிடம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்தது தெரியவந்தது.
மேலும் கைதான ரிஸ்வான் முன்பு கால்டாக்சி ஓட்டுநராக வேலை செய்துள்ளார். அப்போது ஒரு ஓட்டுநர் நூதன முறையில் பணத்தை இழந்துள்ளதாகக் கூறினார். செல்போனில் ஜி.பே.யில் பணம் அனுப்பும் போது பே மற்றும் ரிகொஸ்ட் என்ற இரு குறியீடுகள் வரும். அதில் பே என்ற குறியீட்டை அனுப்பினால் பணம் போகும். ரிகொஸ்ட் என்ற குறியீட்டை அனுப்பினால் பணம் போகாது. வெறும் மேசேஜ் மட்டும் போகும்.
இதனை அறிந்த ரிஸ்வான் இதைப் பயன்படுத்தி மனைவியுடன் சேர்ந்து மோசடி செய்து வந்துள்ளார். பணம் இழந்தவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டால் அதனைத் தொடர்பு கொள்ள முடியாத பிளாக் லிஸ்டில் போட்டுவிடுவார்கள்.
சிறிய தொகைதானே என்று பலரும் புகார் செய்யாமல் இருந்ததால் இந்த மோசடி தம்பதி போலீசில் சிக்காமல் இருந்துள்ளனர். தற்போது போலீசில் சிக்கி உள்ளதன் மூலம் இந்தமோசடி தெரியவந்தது. காதல் தம்பதி வாடகை விட்டில் வசித்து வருகிறார்கள்.
மோசடி செய்த பணத்தில் சொகுசு பொருட்கள் வாங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். கைதான தம்பதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.