வெள்ளியங்கிரி கோயிலில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் பக்தர்களுக்கு இளைப்பாறும் மண்டபம்..!
கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி கோயிலில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் மற்றும் பொருட்கள் பாதுகாப்பு அறையைத் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் – பக்தர்கள் கருத்து
கோயம்புத்தூர் பூண்டி பகுதியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு அனுமதி வழங்கப்படும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு மலையேற்றத்திற்காக வரும் பக்தர்கள் அடிவாரத்தில் ஓய்வெடுக்கவும், பக்தர்களின் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கத் தனி அறை வேண்டுமெனக் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் மற்றும் ரூ.39.50 லட்சம் மதிப்பீட்டில் பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் காலணிகள் பாதுகாப்பு மையம் ஆகியவை கட்டப்பட்டது.
இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இது குறித்துப் பக்தர்கள் கூறும்போது: வெள்ளிங்கிரி கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு தற்போது அமைக்கப்பட்டுள்ள இளைப்பாறும் மண்டபம் மற்றும் பொருட்கள் பாதுகாப்பு அறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதனைச் செயல்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி எனத் தெரிவித்தனர்.