கோவையில் தீயணைப்பு துறை டிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்..!
கோவையில் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட தீயணைப்புத் துறை அதிகாரிகளுடன், தீயணைப்புத் துறை டி.ஜி.பி சீமா அகர்வால் ஆலோசனை மேற்கொண்டார்.
கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் மேற்கு மண்டல தீயணைப்பு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு துறை டி.ஜி.பி சீமா அகர்வால் தலைமையில் நடைபெற்றது.
இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் டிஜிபி தீயணைப்புத் துறை அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் வாகனங்கள் தரமான நிலையில் உள்ளதா எனக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள வணிக வளாகங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள், கோயில்கள் ஆகிய இடங்களில் தீ விபத்து ஏற்படாமல் இருக்கத் தக்க நடவடிக்கைகள் எடுத்து உள்ளார்களா? தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனங்கள், வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து வைத்துள்ளார்களா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து மழைக் காலங்களில் வீரர்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டார். மேலும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் வீரர்களின் குறைகளைக் கேட்டு அறிந்தார்.