ஷோருமில் இருந்த காரை திருடிய ரேபிடோ ஓட்டுநர் கைது!
கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் உள்ள டாடா கார் ஷோரூமிற்கு எலட்ரிக் கார் வாங்குவது போலச் சென்று, இருபது லட்ச ரூபாய் மதிப்புள்ள Tata Curvv எலக்ட்ரிக் காரை திருடிய நபரை சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் டாடா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் ஷோரூம் உள்ளது. இந்த கார் ஷோரூமில் கார் டெலிவரி பொறுப்பாளராக சரவணகுமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர் ஷோரும் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்களை ஆய்வு செய்த பொழுது, ஒரு கார் மாயமாக இருப்பது தெரிய வந்தது. சிசிடிவி கேமராக்களில் பார்த்த பொழுது, அதை ஒரு நபர் திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். காரை திருடி சென்ற நபர் குறித்து சிசிடிவி கேமராவில் பார்த்த பொழுது அவர் கடந்த வாரம் கார் குறித்து விசாரிப்பதற்காக ஷோரும் வந்து சென்ற கர்ணன் என்பது தெரிய வந்தது. மேலும் ஷோரும் அருகிலிருந்த பெட்ரோல் பங்கில், இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வந்து எலட்ரிக் காரை திருடிச் சென்றதும் தெரிய வந்தது.
ஏற்கனவே கார் குறித்து விசாரிப்பதற்காக ஷோரூம் வந்து சென்றிருப்பதால், அவர் கார் வாங்குவது தொடர்பாக வந்திருப்பதாக ஊழியர்கள் நினைத்திருந்த வேளையில், அனைவரும் அசந்து இருந்த நேரத்தைப் பயன்படுத்தி காரை எடுத்துச் சென்று இருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தை மீண்டும் கர்ணன் எடுக்க வந்த பொழுது அங்கிருந்த ஊழியர்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ரேபிடோ வாகனம் ஓட்டி வரும் கர்ணன், சொகுசாக வாழ எலக்ட்ரிக் காரை திருடி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.இதனையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.