நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனம் துவக்கம்!
கோவை மாவட்ட விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனத்தைத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி ரூ.75 லட்சம் மதிப்பீட்டிலான நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனம் கோவை மாவட்டத்தில் செயல்பாட்டிற்கு வந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
பின்னர் வாகனத்தில் உள்ள பரிசோதனை கருவிகள் குறித்து வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் இந்த வாகனம் முன்கூட்டியே எந்தெந்த கிராமங்களுக்குச் செல்கிறது, என்ற தகவல்களை அந்தந்த கிராம விவசாயிகளுக்குத் தகவல் அளிக்கப்படும்.
அதேபோல் மண் பரிசோதனைக்கான கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும். பரிசோதனை முடிவுகள் சான்றிதழ் அட்டைகளாக மாலைக்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதேபோல் வாரம் மூன்று மண் பரிசோதனை முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்துப் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு. பழனிச்சாமி கூறியதாவது : தமிழ்நாடு அரசு சார்பில் 10 மாவட்டங்களுக்கு மண் பரிசோதனை வாகனம் சேவை அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை., தற்போது நிறைவேறப்பட்டுள்ளது.
நேரடியாக விவசாயிகளின் இடத்திற்கே சென்று மண் பரிசோதனை செய்து, எந்த மாதிரியான பயிர்களைப் பயிரிட்டால் லாபம் ஈட்டலாம் என அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். வழக்கமாக ஒவ்வொரு விவசாயியும் மண்ணை எடுத்துக்கொண்டு ஆய்வகத்திற்குச் சென்று கொடுக்கும்போது மூன்று முதல் நான்கு நாட்கள் கழித்துத் தான் பரிசோதனை முடிவுகள் வரும்.
ஆனால் இந்த வாகனம் மூலம் காலையில் கொடுத்து மாலையில் பரிசோதனை முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அதைப் போல் இந்த நடமாடும் மண் பரிசோதனை வாகன சேவையை விவசாயிகள் மகிழ்ச்சியாக வரவேற்கிறோம். தொடர்ந்து இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்