விவசாயி வீட்டில் புகுந்த விஷம் கொண்ட பாம்பு மீட்பு!
கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் தீனம்பாளையம் பகுதியில் விவசாயி வீட்டிற்குள் புகுந்த 5 அடி கண்ணாடிவிரியன் பாம்பைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.
கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் அடுத்த தீனம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு விவசாயி. இவரது வீட்டிற்குள் கண்ணாடி விரியன் பாம்பு புகுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து பாலு தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த சிறப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் மற்றும் பெருமாள் சாமி குழுவினர் விவசாயி வீட்டிலிருந்த சுமார் 5 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பைப் பத்திரமாகப் பிடித்து மீட்டனர்.
இதையடுத்து பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பைத் தீயணைப்புத் துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பாம்பின் உடல் நலம் குறித்து ஆய்வு செய்த வனத்துறையினர் பின்னர் அதனை அடர் வனப் பகுதிக்குள் விடுவித்தனர்.
தற்போது தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் இம்மாதிரியான விஷப்பாம்புகள், பூச்சிகள் வர வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.