மருதமலை வனப்பகுதியில் உயிரிழந்த கர்ப்பிணி யானை – நுண்ணுயிர் தொற்று பாதிப்பு?
கோவை மருதமலை வனப்பகுதியில் உயிரிழந்த பெண் யானை வயிற்றில் இருந்த 15 மாத ஆண் சிசுவைக் கால்நடை மருத்துவர்கள் இறந்த நிலையில் மீட்டனர்.
கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் காட்டு யானைக்குக் கடந்த 4 நாட்களாகக் கால்நடை மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர். முதல் கட்டமாக கிரேன் மூலம் நிற்க வைக்கப்பட்ட பெண் யானைக்கு சுமார் 100 பாட்டில் குளுக்கோஸ், நோய் எதிர்ப்பு மருந்துகள் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து யானையின் காது நரம்பு மூலம் மருந்துகள் செலுத்தப்பட்டது. இதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தசைகளில் உள்ள இறுக்கங்களைப் போக்கும் வகையில் தற்காலிக குட்டை அமைத்து “ஹைட்ரோ தெரபி” சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரம் ஹைட்ரோ தெரபி சிகிச்சையில் இருந்த யானை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது.
இதையடுத்து புதன்கிழமை காலை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் முன்னிலையில் இறந்த பெண் காட்டு யானைக்கு மாவட்ட வன அலுவலர் சுகுமார் உள்ளிட்ட 3 மருத்துவர்கள் அடங்கி கால்நடை மருத்துவர்கள் குழுவினர் யானைக்கு உடல் கூறு ஆய்வு செய்தனர்.
அப்போது யானையின் கருப்பப்பையில் இருந்து சுமார் 15 மாத ஆண் சிசு இறந்த நிலையில் மீட்கப்பட்டது. மேலும் யானையின் பெருங்குடலில் நெகிழிக் குப்பைகள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து யானையின் உடல் பாகங்களின் மாதிரிகள் ஆய்வுக்காகச் சேகரிக்கப்பட்டது.
பின்னர் ஆண் சிசு சென்னை வண்டலூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட வன உயிரின ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப் பதப்படுத்தப்பட்டது. பின்னர் உடற்கூறு ஆய்வுக்குப் பின் பெண் யானை உடல் வன எல்லையில் அடக்கம் செய்யப்பட்டது.
இது குறித்துப் பேசிய கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் கூறியதாவது : உயிரிழந்த பெண் யானைக்கு சுமார் 17 -ல் இருந்து 18 வயது வரை இருக்கலாம். மேலும் யானைக்கு இருதய பாதிப்பு கண்டறியப்பட்டது. இருதய பாதிப்பு காரணமாக யானையின் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இது கல்லீரல் பாதிப்பிற்கான அறிகுறிகள், மேலும் சிறுநீரகத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. வயிற்றில் உணவு ஏதும் இல்லாமல் காலியாக இருந்தது. நேற்று வழங்கப்பட்ட பழங்கள் மட்டுமே கண்டறியப்பட்டிருக்கிறது. சிறுகுடலில் சரியாக ஜீரணமாகாத பழங்களும், பெருங்குடலில் ஜீரணமான சாணத்துடன் நெகிழிக் கழிவுகள், அலுமினிய பாயில்கள் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் யானையின் கர்ப்பப்பையில் சுமார் 12 முதல் 15 மாதங்கள் ஆன ஆண் சிசு இருந்தது தெரியவந்தது. உடலில் வேறு காயங்கள் ஏதுமில்லை. பெண் காட்டு யானை உயிரிழப்பிற்கான முக்கிய காரணம் நுண்ணுயிர் தொற்று ஏற்பட்டது தான். இந்த நுண்ணுயிர் தொற்று காரணமாக உடல் உறுப்புகளில் கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக ரத்தத்தில் நச்சுத்தன்மை அதிகமாகி, இருதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடுகள் இழந்து இறந்துள்ளது.
மேலும் யானையின் உள்ளுறுப்புகள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதை ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ய உள்ளோம். ஆய்வின் முடிவுக்குப் பிறகு எந்த வகையான தொற்று பாதிப்பு உள்ளது என்று தெரிய வரும்.
மேலும் இந்தத் தொற்று ஏற்படுவதற்கு நெகிழி பொருட்களைச் சாப்பிட்டதும், அதில் உள்ள ரசாயனம் மற்றும் கெட்டுப் போன உணவுப் பொருட்கள் தான் காரணம் மீட்கப்பட்ட குட்டியின் உடல் சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு அரசின் மேம்படுத்தப்பட்ட வன உயிரின ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
யானைகள் பாதிக்கப்படும்போது வனப்பகுதியிலேயே வைத்து சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. அதனை முகாமுக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டுமானால் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம். பாதிக்கப்படும் யானைக்கு உடனடியாக ஸ்கேன் செய்யும் வசதி நம்மிடம் இல்லை. மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை தான் வனவிலைக்கு வந்து படுக்கும் அதன் பிறகு சிகிச்சை அளிக்கிறோம் எனக் கூறினார்