பேருந்து நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம்: பச்சை குத்தப்பட்ட புகைப்படம் வெளியீடு
கோயம்புத்தூர் வெள்ளலூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தில் பச்சை குத்தப்பட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினர், அவரைப் பற்றித் தெரிந்தால் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
நேற்று கோயம்புத்தூர் அடுத்த வெள்ளலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த சடலம் கண்டெடுக்கப்படும் போது கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் கொலையா என்ற கோணத்தில் போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்தவரின் அடையாளம் தெரியாத நிலையில் அந்த நபரின் வலது புற மார்பிலும் இடது கையிலும் பச்சை குத்தப்பட்டுள்ள புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
வலதுபுற மார்பில் அபர்ணா (Abarna) என்று ஆங்கிலத்திலும் இடது கையில் XI. XI.MMVI என்றும் பச்சை குத்தப்பட்டுள்ளன.
இந்த இரண்டு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள காவல்துறையினர் அந்த நபர் பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால் உடனடியாக போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் அல்லது நேரில் வருமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.