மூதாட்டியை கொலை செய்த பேரன் கைது!
கோயம்புத்தூர் சுந்தராபுரம் பகுதியில் மூதாட்டியைக் கத்தியால் வெட்டி கொலை செய்த வழக்கில் தலைமறைவான பேரனை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் சுந்தராபுரம் அடுத்த சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மனோன்மணி (80). இவர் திங்கள்கிழமை மதியம் வீட்டின் அருகே இருந்தபோது அங்கு வந்த மகன் வழி பேரன் சிவக்குமார் (25), என்பவர் பணம் கேட்டு தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.
மூதாட்டி பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சிவக்குமார் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனோன்மணியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றார்.
இச்சம்பவம் தொடர்பாக சுந்தராபுரம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பாட்டியைக் கொலை செய்து விட்டுத் தப்பிய சிவக்குமாரை சுந்தராபுரம் காவல்துறை கைது செய்தனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் மூதாட்டியிடம் இருந்த சிவக்குமாரின், தந்தை முருகேசனின் விபத்து இழப்பீடு தொகையைப் பெறக் கடந்த சில மாதங்களாக மனோன்மணியிடம் சிவக்குமார் தகராற்றில் ஈடுபட்டு வந்ததும், மது போதையிலிருந்த சிவக்குமார் ஆத்திரத்தில் மூதாட்டியைக் கொலை செய்ததும் தெரியவந்தது.