கோடநாடு வழக்கு: ஜெயலலிதா தனி உதவியாளரிடம் விசாரணை!
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனி உதவியாளர் பூங்குன்றனுடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2017 -ம் ஆண்டு நடந்த கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, 2022 ல் இருந்து சி.பி.சி.ஐ.டி சிறப்பு விசாரணை குழுவினர், ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை முன்னாள் முதலமைச்சர் தனி பாதுகாப்பு அதிகாரிகள், வளர்ப்பு மகன் சுதாகரன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், காவலாளிகள், மற்றும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 12 பேர் என சுமார் 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்று வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சயானை இரண்டாவது முறையாக விசாரணைக்கு அழைத்த போலீஸார் சுமார் 10 மணி நேரம் விசாரித்தனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றனை விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அளித்தனர்.
இதையடுத்து 11 மணியளவில் பூங்குன்றன், கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த முறை தனிப்படை ஐ.ஜி.சுதாகர் தலைமையில் நடைபெற்ற விசாரணையின் போது பூங்குன்றன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவை முழுமையாக விடியோ பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் முதல் முறையாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணைக்கு பூங்குன்றன் ஆஜராகியுள்ளார். இவ்வழக்கில் யார் மீதாவது சந்தேகம் உள்ளதா? முன்னாள் முதல்வர் வரும் போது அடிக்கடி எஸ்டேட் வந்த நபர்கள் யார்? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அவரிடம் விசாரணை நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.