அங்கன்வாடி மைய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!
அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கன் வாடி ஊழியர்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும், நீண்ட ஆண்டுகளாக பணியில் உள்ள ஊழியர்களுக்குப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் அங்கன் வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினரும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தைத் துவங்கியுள்ளனர். உடனடியாக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.
தற்போது கோயம்புத்தூரில் சுமார் 700 முதல் 1000 ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், இரவும் தொடர்ச்சியாகக் கூடாரம் அமைத்தும், சமைத்தும் இதே பகுதியில் காத்திருப்பு போராட்டத்தைத் தொடர உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.