வீட்டிலிருந்து 14 சவரன் நகை மற்றும் ரூ.37 ஆயிரம் திருட்டு.
கோயம்புத்தூர் குனியமுத்தூரில் மளிகைக் கடை உரிமையாளர் வீட்டிலிருந்த 13 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.37,000 மர்ம நபர் வியாழக்கிழமை திருடிச் சென்றார்.
கோயம்புத்தூர் குனியமுத்தூர் மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் தினகரன் (40). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு தினகரன் தனது மனைவி உள்ளிட்டோருடன் மொட்டை மாடிக்குச் சென்று தூங்கியதாகத் தெரிகிறது. பின்னர் மீண்டும் அதிகாலை 2.30 மணியளவில் கீழே வந்துள்ளனர்.
அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அலமாரியைச் சோதனையிட்டார். அப்போது அங்கிருந்த ரூ.37 ஆயிரம் மாயமானது தெரியவந்தது.
இதையடுத்து உள்ளே சென்று பீரோவைப் பார்த்த போதும், அதில் வைத்திருந்த 13 சவரன் தங்க நகைகள் மாயமானதும் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக தினகரன் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.
புகார் அடிப்படையில் அவரது வீட்டிற்கு வந்த போலீசார் தடயவியல் பிரிவு அதிகாரிகள் உதவியுடன், அங்குப் பதிவான கைரேகைகளைச் சேகரித்தனர். மேலும் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டிற்குள் வந்து சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்