பணியைப் புறக்கணித்து தூய்மை பணி வாகன ஓட்டுநர்கள் ஆர்பாட்டம்!
தனியார் ஒப்பந்த நிறுவனம் முறையாக வருங்கால வைப்பு நிதியைச் செலுத்தக் கோரி கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணி வாகன ஓட்டுநர்கள் பணியைப் புறக்கணித்தும், தங்கள் வாகனங்களை நிறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
மேலும் சுமார் 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இந்த ஊழியர்களுக்கு ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் முறையாக வருங்கால வைப்பு நிதி மற்றும் இ.எஸ்.ஐ கட்டணத்தைச் செலுத்தாமல் ஏமாற்றி வருவதாகக் குற்றம் சாட்டி இருந்தனர்.
இந்நிலையில் இன்று முதல் புதிதாக ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனமும், ஊதியம், வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ பிடித்தம் உள்ளிட்ட எந்த விபரங்களைக் கூறாமல் பணி செய்ய நிர்ப்பந்தம் செய்ததாகக் கூறி சுமார் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணி வாகன ஓட்டுநர்கள் பணியைப் புறக்கணித்து கோயம்புத்தூர் உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அருகே வாகனங்களை நிறுத்தி விட்டுக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை முறையாக ஒப்பந்த நிறுவனம் வருங்கால வைப்பு நிதிக்குச் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இப்போது வந்த நிறுவனமும் எந்த தகவலையும் கூறவில்லை எனக் குற்றம் சாட்டினர், முறையான விளக்கமளிக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் தூய்மை பணி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்