சீறிப்பாயும் காளைகள்: கோவையில் விறுவிறுப்பாக தொடங்கிய ஜல்லிக்கட்டு!
கோவையில் நடக்கும் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்.
கோவை எல் அன்டி சாலையில் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியைத் தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்.
தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை தலைவரும், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர். கார்த்திகேயன், மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில், அமைச்சர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 800க்கும் மேற்பட்ட காளைகள் களம் இறங்க உள்ளது. மேலும் 500 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் ஆா்வமுடன் பிடித்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பதற்கு பொதுமக்களுக்கு பார்வைத்திடல் வசதியும் குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாடுபிடி வீரர்களுக்கோ, மாடுகளுக்கோ காயம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு பொது மருத்துவக் குழுவினர்களும், கால்நடை மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதல் காளையாகக் கோவை வரதராஜ பெருமாள் கோவில் காளை களம் இறங்கியது. முதல்வர் சார்பில், சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், யாரும் பிடிக்கப்படாத காளைக்கு துணை முதல்வர் சார்பில் ஒரு காரும் பரிசு வழங்கப்பட உள்ளது.