துணை குடியரசுத் தலைவர் மற்றும் பாஜக எம்.பி -யை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தும், நீதிபதியை மிரட்டும் தொனியில் பேசி வரும் துணை குடியரசுத் தலைவர் மற்றும் பாஜக எம்.பி. யை கண்டித்து கோயம்புத்தூரில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காதது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அன்மையில் தீர்ப்பு வழங்கியது. அதில் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான காலக்கெடுவையும் வழங்கியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை இந்தியத் துணை குடியரசுத் தலைவர் ஜெபதீக் தன்கர் விமர்சனம் செய்திருந்தார். அதே போல ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி, நிஷிகாந்த் துபேவும் ” நாட்டில் மத ரீதியிலான போரைத் துண்டும் வகையிலும் வரம்பு மீறியும் உச்ச நீதிமன்றம் செல்கிறது என விமர்சித்திருந்தார். இதற்கு வழக்கறிஞர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகக் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது “மத தீவிரவாதத்தை முறியடிப்போம்,” “மத சார்பின்மையை காத்திடுவோம்,” உள்ளிட்ட வாசகங்களுடன் பதாகைகளை ஏந்தியும், துணை குடியரசுத் தலைவர் மற்றும் பாஜக எம்.பி யை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்