உரிய ஆவணங்களின்றி பிடிப்பட்ட ரூ.35 லட்சம் – வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பு
கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.35 லட்சம் பணப்பையுடன் நின்றுக் கொண்டிருந்த கேரளா நபரைப் பிடித்த காட்டூர் போலீஸார், அதனைப் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கோயம்புத்தூர் மாநகர போலீஸ் சார்பில் “பீட் சிஸ்டம்” முறை அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் மூலம் சட்ட விரோத செயல்பாடுகள் மற்றும் குற்றங்களைத் தவிர்க்க 24 மணி நேரமும், சுழற்சி முறையில் போலீஸார் ரோந்து சென்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு பீட் போலீஸார் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையில் ரோந்துச் சென்ற போது, அங்கு சந்தேகத்திடமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீஸார் பிடித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவர் வைத்திருந்த கைப்பை சோதனையிட்டனர். அப்போது அதில் கட்டுக் கட்டுகளாகப் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர் கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சத்தியவான் (43) என்பதும், இவர் தங்க வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அதனை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கோயம்புத்தூர் வழியாக அடிக்கடி கேரளாவிற்கு ஹவலா பணம் கடத்தப்பட்டு வருவதால், காட்டூர் போலீஸார் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.
இதையடுத்து காவல் நிலையம் வந்த வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ரூ.35 லட்சம் பணத்தை போலீஸார் ஒப்படைத்தனர்.