கோடநாடு வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் சயான் ஆஜர்!
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக 2-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சயானிடம், சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த 2017 -ல் நடந்த கோடநாடு கொலை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
தற்போது இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி சிறப்பு விசாரணை குழுவினர் ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 12 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இதுவரை கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், கோடநாடு எஸ்டேட் காவலாளிகள் உள்ளிட்ட 250 -க்கும் மேற்பட்ட நபர்களிடம் சி பி சி ஐ டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்து வைத்துள்ளனர்.
இதனிடையே கோடநாடு எஸ்டேட் பங்களாவில் சிசிடிவி மற்றும் கணினி ஆப்ரேட்டராக பணியாற்றி வந்த தினேஷ் குமார் தற்கொலை வழக்கு தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் கோடநாடு எஸ்டேட் பங்களாவிற்கு அடிக்கடி செல்லும் முன்னால் அதிமுக பிரமுகரும், தற்போதைய அமமுக தொழிற்சங்க நிர்வாகியுமான கர்சன் செல்வத்திடம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் விசாரணை நடத்த இரண்டாவது முறையாக அவருக்குச் சம்மன் வழங்கப்பட்டது. கடந்த கடந்த வாரம் ஆஜராக அழைத்த நிலையில், உடல் நலக்குறைவால் சயான் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் இன்று அவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி, எஸ்.பி மாதவன் முன்னிலையில், ஏ டி எஸ் பி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டன