கோடநாடு வழக்கு: அமமுக நிர்வாகி கர்சன் செல்வத்திடம் விசாரணை!
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு மற்றும் கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக அமமுக தொழிற்சங்க நிர்வாகி கர்சன் செல்வத்திடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையின்ர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2017 – ல் நடந்த கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி சிறப்பு விசாரணைக் குழு ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்தது, மற்றும் 2017 ஜூலை மாதத்திலேயே கோடநாடு எஸ்டேட் சிசிடிவி மற்றும் கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை என நடந்த மரணங்கள் தொடர்பாகவும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.
இதுவரை இவ்வழக்கில் தொடர்புடைய சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்டோரிடமும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனிப்பாதுகாப்பு அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற்றது. அதே போலக் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், முன்னாள் டி.எஸ்.பி, கோடநாடு காவலாளிகள் என 250க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
அடுத்தடுத்து சாட்சிகள் விசாரணை என சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணையைத் துரிதப்படுத்தி வரும் நிலையில், மீண்டும் இவ்வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் விசாரிக்க காவல்துறை சம்மன் வழங்கினர். கடந்த வாரம் சயான் ஆஜராகாததால் மீண்டும் வரும் 25 ஆம் தேதி ஆஜராகச் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் அதிமுக நிர்வாகியும், தற்போதைய அமமுக தொழில் சங்க துணை செயலாளராகவும் உள்ள கர்சன் செல்வத்திடம் விசாரணை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி காவல்துறை சம்மன் வழங்கினர். இதையடுத்து இன்று கர்சன் செல்வம் விசாரணைக்காகக் கோயம்புத்தூர் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் ஏ.டி.எஸ்.பி முருகவேல் விசாரணை நடத்தி வருகிறார்.
கர்சன் செல்வம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களைச் சம்பவம் நடந்த தினத்தன்று காலை எஸ்டேட் அருகே சுற்றித் திரிந்ததை பார்த்ததாக நீதிமன்றத்தில் சாட்சியளித்திருந்தார். இந்நிலையில் கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கில் கர்சன் செல்வத்திற்குத் தொடர்பு உள்ளதாக சிபிசிஐடி காவல்துறைக்கு வந்த மனு அடிப்படையிலேயே அவர் அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரிடம் மேற்கொள்ளும் விசாரணைக்குப் பின் மேலும் சிலரை விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே போலக் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக இளவரசி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் விரைவில் சி.பி.சி.ஐ.டி காவல்துறை விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.