Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

கோயம்புத்தூர்: இளம்பெண் வெட்டி கொலை – கொலையாளி அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரண்!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே மாட்டுக் கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராற்றில், ரம்யா என்ற இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்து, கொலை ஆயுதத்துடன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அடுத்த பீடம்பள்ளி கள்ளித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், தனது தந்தை பழனிச்சாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து, தனியாக வசித்து வந்துள்ளார். இவரது தாய் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், ராஜேந்திரன் தனது வீட்டருகே உள்ள மாட்டுக் கொட்டகையை பாப்பம்பட்டியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கு நாய்கள் வளர்ப்பதற்காக வாடகைக்கு விட்டிருந்தார்.

கடந்த 45 நாட்களாக அங்குத் தங்கியிருந்த ரம்யாவைப் பார்க்க அவ்வப்போது ஆட்டோவில் சிலர் வருவது ராஜேந்திரனுக்குப் பிடிக்கவில்லை. இதனால், கொட்டகையை காலி செய்யுமாறு ரம்யாவிடம் கூறிய அவர், இது தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார்.

நேற்று மாலை, வழக்கம் போல் ரம்யாவைப் பார்க்கச் சிலர் ஆட்டோவில் வந்தபோது, அவர்களை உள்ளே விடாமல் ராஜேந்திரன் தடுத்தார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரத்தில், வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வந்த ராஜேந்திரன், ரம்யாவின் கழுத்தில் வெட்டி படுகொலை செய்தார்.

பின்னர் கொலை செய்த அரிவாளுடன் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்த ராஜேந்திரனை காவல்துறையினர் கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, ரம்யாவின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாட்டுக் கொட்டகை தகராற்றில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம், சூலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!