Top Storiesஅரசியல்

கோயம்புத்தூரில் 10 தொகுதியிலும் தேசிய ஜனநாய கூட்டணி வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய காத்திருப்போர் அறையை வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து காத்திருப்பு அறை கட்டி பொதுமக்களுக்காக அர்ப்பணித்து உள்ளோம். ஒரு வருடத்திற்கு முன்பு, நான் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு இங்கு இருக்கக் கூடிய, குறிப்பாக பச்சிளம் குழந்தைகள் மற்றும் பிரசவ வார்டு பார்ப்பதற்காக வந்தேன். அப்போது, பொதுமக்கள் தங்களுடைய பெண் பிள்ளைகளை பிரசவ வார்டுக்கு உள்ளே அனுப்பிவிட்டு வெளியே மழை, வெயில், குளிர் என காத்து கிடந்தனர். அவர்கள் காத்து இருக்க அறைகள் எதுவும் இல்லாமல் இருந்தது.

அதை பார்த்து விட்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து காத்திருப்பு அறை ஒன்று கட்டி தருவதற்காக மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கேட்டேன். உடனடியாக அவர்களும் இந்த இடத்தை ஆய்வு செய்து இந்த இடத்தில் கட்டலாம் என ஒதுக்கீடு செய்து கொடுத்தார். அதனால் பொதுப் பணித் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து காத்திருப்பு அறை அமைத்துக் கொடுத்து உள்ளோம். இதனால் பிரசவத்திற்கு செல்லும் பெண்களின் குடும்பத்தார் இந்த அறையில் தங்கிக் கொள்ளலாம். இதில், குடிநீர், கழிப்பிட வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளது. கோவையில் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக புதிதாக நிறைய திட்டங்களை மாநில அரசு அறிவிக்க வேண்டும் என கேட்கிறோம் என்றார்.

ஆபாசமாக பேசும் திமுக பேச்சாளர்கள் மீது நடவடிக்கை வேண்டும்:

தி.மு.க. பேச்சாளர்கள் ஒருவிதமாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது அந்த கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் கூட அருவருக்கத்தக்க வகையில் பேசிக்கொண்டு இருப்பதை பார்க்கிறோம். இன்று பல்வேறு அமைப்புகள் குறிப்பாக பெண்கள் அமைப்புகள் எல்லாம் இதற்காக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். மாநிலத்தின் முதல்வரே அந்தப் பேச்சை சகிக்க முடியாமல் அவரை  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி இருக்கிறார்.

ஒரு காலத்தில் குறிப்பிட்ட மதத்தை அவதூறு செய்வது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கேவலமாக பேசுவது என்று இருந்தது. தற்போது மக்களின் ரியாக்ஷனை பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்கக்கூடிய அளவுக்கு மாறுதல் நடந்துள்ளது. ஆனாலும் கூட தொடர்ச்சியாக அவர்கள் அப்படியேதான் பேசி கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எங்களுடைய கோரிக்கையாக உள்ளது என்று கூறினார். 

ஆளுநருக்கு உரிமை உண்டு:

உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கு மாநில அரசுக்கு உரிமை இருப்பது போலவே மாநிலத்தின் ஆளுநருக்கு உரிமை உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் அமைப்புச் சட்டம் எல்லோருக்குமான, சமமான சட்டத்தை கொடுத்து உள்ளது. யாராக இருந்தாலும் அவர்களின் வரம்புக்குள் இருக்கும் அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். சில நேரங்களில் நீதித்துறையோ (அ) அதிகாரத்தில் இருக்கக் கூடிய நிர்வாக தரப்போ, தங்களுடைய அதிகாரத்தை மீறுகிறார்கள். மாநிலத்தின் ஆளுநர், துணை குடியரசுத் தலைவரை பார்ப்பதாக இருக்கட்டும், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக இருக்கட்டும் அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள், முடிவு செய்து கொள்வார்கள் என கூறினார். 

மொழிப்போருக்கு என்ன அவசியம் வந்தது?

மொழிப்போருக்கு என்ன அவசியம் வந்தது? யாராவது மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள்? பா.ஜ.க-வின் நிலைப்பாடு, மத்திய அரசின் கல்விக் கொள்கையில் எந்த மொழியும் கட்டாயம் இல்லை என்றுதான் கூறுகிறது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் படிக்கக்கூடிய குழந்தைகள் ஒரு வாய்ப்பை கொடுக்கும் அரசு, ஏழை அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு ஏன் அந்த வாய்ப்பை கொடுக்கவில்லை என்றுதான் கேட்கிறோம் என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி:

இன்னும் 7, 8 மாதங்கள் உள்ளது. பொறுத்திருந்து பாருங்கள் யாரெல்லாம் வந்து எங்களுடன் இணைவார்கள் என்று, வெற்றி கூட்டணியாக இருக்கப் போவது தேசிய ஜனநாயக கூட்டணிதான். எங்கு சென்றாலும் அடுத்தது உங்கள் ஆட்சிதான் என்று கூறும் அளவுக்கு இருக்கிறது. யாரெல்லாம் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்களெல்லாம் எங்கள் பக்கம் வந்து விடுவார்கள் என்று கூறினார்.

இந்த முறை எங்களுக்கு அதிகமான பி.ஜே.பி உறுப்பினர்கள், வரலாற்றில் இல்லாத அளவுக்கு 2026-ல் உள்ளே நுழையப் போகிறார்கள். எத்தனை இடங்கள் கேட்க போகிறோம் என்பதையெல்லாம் பொறுத்து இருந்து பாருங்கள் என கூறினார். கடந்த முறை ஜெயித்ததை போலவே, கோவையில் 10-க்கு 10 தேசிய ஜனநாயக கூட்டணி ஜெயிக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!