அதிமுக – பாஜக கூட்டணி – தொடர் மௌனத்தில் ஒ.பி.எஸ்…
பாஜக – அதிமுக கூட்டணி தொடர்பாக, தொடர்ந்து மவுனத்தையே பதிலாக அளித்து வரும், ஓ.பி.எஸ் கோவையில் செய்தியாளர்களின் கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கும், இன்று விடுமுறை, நன்றி, வணக்கம், வாழ்த்துக்கள் என்று மட்டும் கூறிச் சென்றார்.
அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பு வெளியான அன்றைய தினமே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோயம்புத்தூர் கணபதி சங்கனூர் பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் ஓய்வு எடுக்க வந்தார்.
ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர், அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சிகளை எடுத்து வந்த நிலையில், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார்.
தொடர் மெளனம்.
இது வரை இக்கூட்டணி தொடர்பாகவோ, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறார்களா? என்பது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் ஓ.பி.எஸ். மவுனமாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் ஒரு வாரம் கோவையில் ஓய்விலிருந்த ஓ.பி.எஸ், இன்று (வெள்ளிக்கிழமை ) தேனி கிளம்பினார்.
முன்னதாக அவரை பார்க்க வந்த அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனைக்குள் சென்று ஓ.பி.எஸ். வுடன் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் பாஜக – அதிமுக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது எந்த பதிலும் சொல்லாமல் சென்ற அவர், இன்று விடுமுறை என்றும், வணக்கம், வாழ்த்துக்கள் என மட்டுமே கூறிச்சென்றார்.
இந்நிலையில் ஓ.பி.எஸ். வுடன் மேற்கொண்ட ஆலோசனை குறித்துப் பேசிய நிர்வாகி ஒருவர் கூறும் போது நேரம் கிடைக்கும் போது ஓய்வு எடுப்பதற்காக வந்தார், ஓய்வுக்கு வர 2 மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்டது தான். அரசியல் குறித்து ஏதும் பெரிதாகப் பேசவில்லை.
அரசியல் நன்றாக, தெளிவாகச் செல்கிறது. நிச்சயமாக நமக்கு நல்ல காலம் இருப்பதாகக் கூறினார். தைரியமாக இருக்குமாறு ஓ.பி.எஸ். தெரிவித்தார், சில ரகசியத்தைக் கூறி முடியாது இல்லையா எனக் கூறினார்.