Top Storiesதமிழ்நாடு

தமிழில் மட்டுமே இனி அரசாணைகள் – அரசு உத்தரவு

தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என அனைத்து துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறை அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அரசாணையில், “தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்தவும் கீழ்காணும் அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்ற வேண்டும். அதன்படி, அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும். சுற்றறிக்கை குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும். துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.

வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடித போக்குவரத்துகள் ஆகியவை விலக்களிக்கப்பட்ட இனங்கள் தவிர எல்லா இனங்களிலும் தமிழில் தாள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.

மேலும் ஆங்கிலத்தில் வெளியிட விலக்களிக்கப்பட்டுள்ள இனங்களுக்கு நேர்வுக்கேற்ப தலைமைச்செயலகத் துறைகளால் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அரசாணைகளை தமிழில் வெளியிடுவதற்கு ஏதுவாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவு மூலம் தமிழாக்கம் செய்வதற்கு அனுப்பிவைக்கவும் அல்லது அந்தந்த துறைகளாலேயே தமிழில் மொழிபெயர்க்கப்படும் அரசாணைகளை தேவைப்படின் கூர்ந்தாய்வு செய்யும் பொருட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவுக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!