கோயம்புத்தூர்: காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி!
கோயம்புத்தூர் மாநகர காவல்துறை தொடங்கப்பட்டு 35 ஆண்டு பவள விழாவைக் கொண்டாடும் விதமாக காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது.
கோயம்புத்தூரில் மாநகர காவல் துறை கடந்த 1990ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் 35 ஆண்டு, பவள விழாவைக் கொண்டாடும் விதமாகக் காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் அனைத்து காவல் நிலையங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த பவள விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான பேச்சு போட்டி, ஓவியப் போட்டி, வினாடி -வினா, பொதுமக்கள்- காவல்துறை நல்லுறவை மேம்படுத்தும் விதமாக கிரிக்கெட் போட்டி, சைக்கிளின், மருத்துவ முகாம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் வரும் 26ம் தேதி வரை நடைபெறுகின்றன. விழாவின் முதல் நாளான நேற்று சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் கோவையில் காவல்துறை பொதுமக்கள் இணைந்து விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.
இன்றும் பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் ஒருபகுதியாகக் கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறைக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவை மாநகரில் உள்ள வெவ்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
இப்போட்டியை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டி பல்வேறு சுற்றுகளாக நடைபெற்று 26ம் தேதி நிறைவடைகிறது.