அதிமுக – பாஜக கூட்டணியின் தலைமை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!
கூட்டணி ஆட்சி அமைக்கப் போகின்றோம் என அமித்ஷா சொல்கின்றார், ஆனால் எடப்பாடி பழனிச்சாமி சொல்ல வில்லை எனவும், இதில் அதிமுகவின் ரோல் என்ன ? என பா.ஜ.க அதிமுக கூட்டணி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, வக்பு திருத்தச் சட்ட மசோதாவை நிறைவேற்றி இஸ்லாமியச் சமூகத்தை ஒன்றிய அரசு அச்சுறுத்தி இருக்கின்றது எனவும், இஸ்லாமிய வக்பு சொத்துகளை நிர்வகிக்க , இஸ்லாமியர் அல்லாதவர்களை ஒன்றிய அரசு நியமிக்க இருப்பது அடாவடி அரசியல், இது நவீன பாசிசம் எனத் தெரிவித்தார்.
இந்த பாசிச தாக்குதலை ஒன்றிய அரசு சட்டப்படி நிறைவேற்றி இருப்பது தவறானது எனவும் இதைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்த அவர், பா.ஜ. க அல்லாத மாநிலங்களில் இதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பூர்வமான கடமைகளிலிருந்து விலகி , அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதமாகச் செயல்பட்டுள்ளார் என்பதை சுட்டிக்காட்டி, இதற்கு எதிராக வரலாற்றுப் பூர்வமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கின்றது எனவும், இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் சட்டப்பூர்வமாக வெற்றி பெற்று இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் எனத் தெரிவித்த அவர், ஆனால் அவர் பதவி விலக முன்வரமாட்டார் என்பதால், குடியரசுத் தலைவர் அவரை ஆளுநர் பொறுப்பிலிருந்து பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதிமுகவை மிரட்டி பா.ஜ.க பணிய வைத்து இருக்கின்றது எனவும், கூட்டணி ஆட்சி அமைப்போம் என அமித்ஷா அறிவிக்கின்றார், அங்கு யார் தலைமையில் கூட்டணி என்ற சந்தேகம் எழுகின்றது எனத் தெரிவித்தார். கூட்டணி ஆட்சி அமைக்கப் போகின்றோம் என எடப்பாடி பழனிச்சாமி சொல்ல வில்லை எனவும், இதில் அதிமுகவின் ரோல் என்ன ? எனவும் கேள்வி எழுப்பினார்.
அதிமுக தொண்டர்கள் இதை மனப்பூர்வமாக ஏற்கவில்லை என நினைக்கிறேன் எனக் கூறிய அவர், இந்த கூட்டணியால், திமுக கூட்டணிக்கு எதிராக எந்த தாக்கமும் ஏற்படாது எனத் தெரிவித்தார். கூட்டணி ஆட்சி அமைப்போம் என அமித்ஷா சொல்லி இருக்கின்றார் எனத் தெரிவித்த அவர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சியில் இருந்து வெளியேறுவேன் எனச் சொல்லி இருக்கின்றார். அதிமுகவின் தலைவர்கள் இதை எப்படி ஏற்கின்றனர் எனத் தெரியவில்லை எனவும் தெரிவித்தார். பா.ஜ.க அல்லாத கூட்டணியை அமைக்க எடப்பாடி முயற்சித்தார்.
ஆனால் அது முடியவில்லை எனத் தெரிவித்த அவர், அதிமுகவிற்கு ஏதோ நெருக்கடியை பா.ஜ.க கொடுத்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார். பா.ஜ.க இருக்கும் அணிக்குச் சிறுபான்மையினர் வாக்களிக்க மாட்டார்கள் எனக்கூறிய அவர், வக்பு திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து அதிமுக நாடாளுமன்றத்தில் வாக்களித்து இருக்கின்றனர் எனவும் ஆனால் பா.ஜ.கவுடன் இப்போது கூட்டணி வைத்து இருக்கின்றனர் எனவும் இதற்கு இடையில் ஏதோ நடந்துள்ளது எனத் தெரிவித்தார்.
பொள்ளாச்சி சிறுமி விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் எனவும் தொல் திருமாவளவன் தெரிவித்தார்