தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயமாகாது – அமைச்சர் சிவசங்கர்
போக்குவரத்துத் துறை தனியார் மயமாக்கப் படப் போகின்றது எனப் பலர் வதந்தியைப் பரப்பினாலும், புதிய பேருந்துகள் வாங்குவது, புதிய ஊழியர் நியமனம் போன்றவற்றின் மூலம் இந்த துறை பொதுத்துறை நிறுவனமாகத் தொடர்ந்து செயல்படும் என்பதை உணர்த்தும் விதமாகத் தமிழக அரசின் செயல்பாடுகள் இருக்கின்றது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
கோயம்புத்தூர் இராமநாதபுரம் சுங்கம் போக்குவரத்து பணிமனையில் 13 புதிய அரசு பேருந்துகள் இயக்கத்தைத் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். முன்னதாக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் புதிதாகக் கருணை அடிப்படையில் பணியில் இணையும் 22 பெண் நடத்துநர்கள் உட்பட 44 பேருக்குப் பணி நியமன ஆணையை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சிவசங்கர், இந்த ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இதுவரை சுமார் 1000 பேர் வரை கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்துள்ளோம், இது ஒரு சாதனை எனவும் தெரிவித்தார். மேலும் போக்குவரத்துத் துறையில்
பெண்களுக்குப் பணி வாய்ப்பிற்காக அவர்களின் உயரம் 10 செ.மீ குறைத்து பெண்களுக்கான வாய்ப்புகளை முதல்வர் ஏற்படுத்தி இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.
321 பேருந்துகள் கோவை கோட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு முதல்கட்டமாக 13 பேருந்துகள் இன்று பயன்பாட்டிற்கு வருகின்றது எனத் தெரிவித்த அவர், விடியல் பயண நிதி உட்பட பல்வேறு நிதியினை போக்குவரத்துத் துறைக்கு வழங்கி போக்கு கழகத்தின் நெருக்கடிகளைச் சமாளிக்க அனைத்து உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார் எனத் தெரிவித்தார்.
போக்குவரத்துத் துறை தனியார் மயமாக்கப்படப் போகின்றது எனப் பலர் வதந்தியைப் பரப்பினாலும், புதிய பேருந்துகள் வாங்குவது, புதிய ஊழியர் நியமனம் போன்றவற்றின் மூலம் இது பொதுத்துறை நிறுவனமாகத் தொடர்ந்து செயல்படும் என்பதை உணர்த்தும் விதமாக அரசின் செயல்பாடுகள் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
சமீபத்தில் கர்நாடக போக்குவரத்து அதிகாரிகள் கும்பகோணம் வந்து நமது செயல்பாடுகளைப் பதிவு செய்து எடுத்துச் சென்றுள்ளனர் எனத் தெரிவித்த அவர்,பொங்கலுக்கும் ,தீபாவளிக்கும் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்ததாலும் அதைச் சமாளிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.
கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த, புதிதாகப் பணி நியமனம் பெற்றவர்கள், பெண்களுக்கு நடத்துநர் பணி சற்று சவாலானதாக இருந்தாலும் தங்களால் அதைத் திறம்படச் செய்ய முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும் கருணை அடிப்படையில் இந்த பணி வழங்கப்பட்டிருப்பதால் நெருக்கடியிலிருந்து போக்குவரத்து ஊழியர் குடும்பத்தினர் மீண்டு நலமான வாழ்க்கை வாழ வழிவகை செய்திருப்பது மகிழ்ச்சியானது எனவும் பணி நியமன ஆணையர்களைப் பெற்றுக் கொண்ட பெண்கள் தெரிவித்தனர்.