சுவரில் மோதிய ஆம்னி வேன் – ஓட்டுநர் உயிரிழப்பு
கோயம்புத்தூர், சின்ன தடாகம் அருகே சுவரில் ஆம்னி வேன் மோதிய விபத்தில் கால் டாக்ஸி ஓட்டுநர் உயிரிழந்தார். அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர், சின்ன தடாகம் திருவள்ளுவர் நகர்ப் பகுதியில் சேர்ந்தவர் செல்வராஜ் (41). இவர் சொந்தமாக ஆம்னி வேன் வைத்து கால் டாக்ஸி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பன்னிமடையில் இருந்து தடாகம் நோக்கி வந்து கொண்டு இருந்த போது வரப்பாளையம் பிரிவு அருகே ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த சுவரில் வேகமாக மோதி நின்றது. இதில் இவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சாய்பாபா காலனி உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காகக் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து தடாகம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இவரது ஆம்னி வேன் நிலை தடுமாறி சுவரில் மோதும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.