Top Storiesஉலகம்

மியான்மர், தாய்லாந்தில் பயங்கர நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு

மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளது.

இன்று காலை 11.50 தாய்லாந்து மற்றும் மியான்மரில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர்அளவில் 7.7 ஆகப் பதிவாகியிருந்தது.

தாய்லாந்தில் கட்டங்கள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்திருக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. கட்டட இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை கடுமையாக இருக்கும் என்றும் அஞ்சப்படுவதாகக் கூறப்படுகிறது.

தாய்லாந்து முழுவதும் விமான சேவை முற்றிலம் நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க அமைச்சரவையின் அவசரக் கூட்டம் கூடியிருக்கிறது.

மியான்மரில் முற்றிலும் இணையதள சேவை முடங்கியிருப்பதால், அங்கு என்ன நடக்கிறது என்பதே வெளியுலகுக்குத் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கட்டடங்களிலிருந்து ஏராளமானோர் வெளியேற்றப்பட்டனர். பாங்காக்கில் உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் விடியோக்களில், வானுயர்ந்த கட்டடங்கள் அசைவதையும், மக்கள் பாதுகாப்புக்காக ஓடுவதையும், கட்டடங்கள் இடிந்துவிழுந்திருப்பதையும் பார்க்கும்போது பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டு பேர் பலியானதாகவும், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுவதாகவும் தாய் அவசரகால மீட்புப் படை தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம், இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் மக்கள் நில அதிர்வை உணர்ந்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!