உயர் ரக போதைப்பொருட்கள் விற்ற காவல் உதவி ஆய்வாளர் மகன் உட்பட 7 பேர் கைது!
கோயம்புத்தூரில் உயர் ரக போதைப் பொருட்கள் விற்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் மகன் உட்பட 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.57 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.20 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!*
கோயம்புத்தூர் மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க மாநகர போலீசார் தனிப்படை அமைத்துக் கண்காணிப்பை தீவிர்படுத்தி உள்ளனர். மேலும் கோயம்புத்தூர் மாநகரில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அடிக்கடி போலீசார் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோயம்புத்தூர் பூ மார்க்கெட் அருகே சட்டவிரோதமாக உயர்ரக போதைப் பொருட்களை விற்பனை நடப்பதாக மாநகர போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆர் எஸ் புரம் தனிப்படை போலீசார் பூ மார்க்கெட் அருகே சாதாரண உடை அணிந்து காத்திருந்தனர். அப்போது காரில் வந்த இளைஞர்கள் போதை பொருள் விற்பனைக்காக நின்றுகொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
இதையடுத்து காரில் போலீசார் சோதனையிட்டபோது அதில் கொக்கையின், எல்.எஸ்.டி ஸ்டாம்ப், மெத்தபெட்டமைன் உள்ளிட்ட உயர் ரக போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா, மது பாட்டில்கள், கட்டுக் கட்டாகப் பணம் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து இளைஞர்களைப் பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட இளைஞர்கள் கோவையில் தங்கி ரேபிட்டோ, கால் டாக்ஸி மற்றும் ஐடி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேலை செய்து கொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (39), டாக்ஸி ஓட்டுநர். விநாயகம் (34) ரேபிடோ ஓட்டுநர், பி.என். பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணகாந்த் (34). ஐடி ஊழியர், அதேபோல் கோவை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயலட்சுமியின் மகன் மகாவிஷ்ணு (28), சுங்கம் பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ் (24), ஐஸ்கிரீம் பார்லர் உரிமையாளர், நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த ரித்தீஷ் லம்பா (41), உணவு வியாபாரம். ரோஹன் ஷெட்டி (30), ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. இதில் பிடிபட்ட சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் மகாவிஷ்ணு கிரிக்கெட் வீரராக உள்ளார்.
மேலும் இவர்கள் கடந்த 1.5 ஆண்டாக மும்பையில் இருந்து ஆன்லைன் மூலம் உயர் ரக போதைப் பொருட்களை ஆர்டர் செய்து, அதனை கொரியர் மூலம் வாங்கி தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்தனர். அதேபோல் கோயம்புத்தூரிலும் இளைஞர்களைக் குறி வைத்து போதைப் பொருட்களை விற்பனை செய்து, அதற்கான தொகையை ஆன்லைன் மூலம் பெற்றுள்ளனர்.
போதைப் பொருள் விற்பனையில் இருந்து வந்த வருவாயை வைத்து ஒரு சில இளைஞர்கள் உல்லாசமாகச் செலவு செய்து வந்ததும், சிலர் அசையா சொத்துக்களாக வாங்கி வைத்ததும் தெரியவந்தது. அதேபோல் ரேபிட்டோ, கால் டாக்ஸி, ஐடி பணிகளைப் பெயரளவிற்கு செய்து கொண்டு, போதைப்பொருள் விற்பனையைப் பிரதான தொழிலாகச் செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஏழு இளைஞர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 92 கிராம் கொக்கைன், ஒரு கிலோ கஞ்சா, 1.60 கிலோ கஞ்சா இலைகள், 1.60 கிலோ ஓ.ஜி குஷ் உள்ளிட்ட போதைப் பொருள்கள் மற்றும் ரூ.25 லட்சம் ரொக்கம், பணம் என்னும் இயந்திரம், 12 செல்போன்கள் மற்றும் மூன்று வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்தியச் சிறையில் அடைத்தனர். அதேபோல் இந்த போதைப் பொருட்களை யாரிடம் இருந்து வாங்குகிறார்கள், எங்கெங்கு விற்பனை செய்யப்படுகிறது, என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.