கோயம்புத்தூர்செய்திகள்

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு..!

கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை ஏறிய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நபர் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த போது, மூன்றாவது மலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் பழையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (40). இவரது மனைவி நித்யா, இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். மேலும் சிவா கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பலசரக்கு பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் சிவா தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நேற்று கோயம்புத்தூர் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஏற்றத்திற்காகக் கோயம்புத்தூர் வந்தனர்.

நேற்று இரவு அனைவரும் மலை ஏறிய நிலையில், ஏழாவது மலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கீழே இறங்கி உள்ளனர். அப்போது மூன்றாவது மலையில் வந்த போது திடீரென சிவா மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி செய்து, ஒன்றாவது மலையில் இருந்த அவசரக்கால மருத்துவரும் அங்குச் சென்று சிவாவைப் பரிசோதனை செய்தார். அப்போது சிவா உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறையினர் மற்றும் ஊழியர்கள், உறவினர்கள் சிவாவின் உடலை அடிவாரத்திற்குத் தூக்கி வந்தனர். தகவலறிந்து வந்த ஆலாந்துறை போலீசார், சிவாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் சிவாவிற்குக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருதய பிரச்சனை இருந்ததாகவும், அதற்காக ஆஞ்சியோ சிகிச்சை எடுத்ததும் தெரியவந்தது. இருதய பாதிப்பு உள்ளவர்கள் வெள்ளிங்கிரி மலையேற்றத்தைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!