கோயம்புத்தூரில் சேதப்படுத்தப்பட்ட “பெண் கல்வி விழிப்புணர்வு சிலை” மீண்டும் சீரமைப்பு
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேதப்படுத்தப்பட்ட “பெண் கல்வி விழிப்புணர்வு சிலை” மீண்டும் சீரமைத்து நிறுவப்பட்டது.
தமிழ்நாடு அரசுக் கல்வியை ஊக்குவிக்க பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாகப் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கிராமங்கள் தோறும் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையின் நடுவே பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், புத்தகத்தின் மீது சிறுமி ஏறிச் செல்வது போன்ற விழிப்புணர்வு சிலை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த சிலையைக் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியின் சிலையை உடைத்துச் சேதப்படுத்திச் சென்றார்.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மீண்டும் அதே பகுதியில் சேதப்படுத்தப்பட்ட சிறுமியின் சிலையைப் பெண் சிலை வடிவமைப்பாளர் பிரியா என்பவர் சீரமைத்தார்.