கோவை: சாலையில் ஒருவழி பாதையில் காரில் சென்று ரகளை செய்த இளைஞரால் பரபரப்பு!
கோவை அவினாசி சாலையில் ஒருவழி பாதையில் காரில் சென்று ரகளை செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அவினாசி சாலையில் அதிகளவு கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளதால், எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும், இந்த நிலையில் நேற்று இரவு பீளமேடு அருகே திடிரெனச் சொகுசு கார் ஒன்று ஒரு வழிப்பாதையில் வேகமாக வந்தது. இதைக் கண்ட சக வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அந்தக் காரைத் தடுத்து நிறுத்தினர், ஆனாலும் காரில் வந்த நபர் தொடர்ந்து வாகனத்தை இயக்க முற்பட்டதால் காரின் கண்ணாடிகளை உடைத்து ஓட்டுநரைப் பொதுமக்கள் வெளியே இழுத்தனர். இதையடுத்து அந்த நபர் திடிரெனக் காரின் மேல் பகுதியில் ஏறி நின்றதால் அங்குப் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த பீளமேடு போலீஸார் காரை ஓட்டி வந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பெயரை மாற்றி மாற்றிக் கூறியதால், சந்தேகமடைந்த போலீஸார் உயர் ரக போதை பொருள் ஏதேனும் உற்கொண்டுள்ளாரா? எனச் சோதனை செய்யக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர் விசாரணையில் காரில் வந்து ரகளை செய்த நபர் கேரளாவை சேர்ந்த ஆண்டனி என்பதும், இவர்கள் சேலத்தில் குடும்பத்தோடு தங்கி இருப்பதும் தெரியவந்தது. மேலும் கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த நிலையில் காரில் பீளமேட்டிற்கு வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து அவரது தந்தையிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் மன அழுத்ததிற்கு மருந்து உட்கொண்டு வருவதும், நேற்று அவர் மருந்து எடுக்காமல் வந்ததே பிரச்சனைக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்ர். தொடர்ந்து விசாரித்த போலீஸார் விசாரணைக்குப் பின் ஆண்டனியை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.