சிறுவர்கள் ஓட்டிய வாகனத்தால் விபரீதம்: விளையாடிய குழந்தை மீது மோதிய பைக் – சிசிடிவி வைரல்
கோவையில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தபோது அதிவேகமாக பைக்கில் வந்த மூன்று சிறுவர்கள் குழந்தை மீது மோதி விபத்து ஏற்படுத்திய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, கரும்புக்கடை ஆசாத் நகர், ஐந்தாவது வீதியில் விடுமுறை தினம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் மூன்று சிறுவர்கள் எவ்வித முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பாமல் அதிவேகமாக வந்தனர்.
மேலும் வேகத்தைக் குறைக்காமல், வந்து அவர்கள் அங்கு விளையாடிக் கொண்டு இருந்த குழந்தைகள்மீது மோதிய வேகத்தில் வாகனத்தை நிறுத்த முடியாமல் சிறிது தூரம் சென்று நிறுத்தினர்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் நடந்த வீதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் குடியிருப்பு பகுதிகளில் சிறுவர்கள் வேகத்தில் வாகனத்தை ஓட்டி வந்ததும், அதிலிருந்து மூன்று பேர் வந்ததும் தெரிய வந்தது.
குடியிருப்பு வீதிகளில் குழந்தைகள் முதியவர்கள் நடமாடுவார்கள் என்ற அச்சமின்றி சிறுவர்கள் அதிவேகத்தில் செல்வதை காவல் துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் பெற்றோர்மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.