புத்தாண்டு கொண்டாட்டம்: கோவை மாநகர போலீசார் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
கோவை மாநகரில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளைக் கோவை மாநகர போலீஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாகக் கோவை மாநகர் பகுதியில் மட்டும் 35 இடங்களில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட உள்ளனர்.
புத்தாண்டு தினத்தன்று கோவை ஜி.டி நாயுடு மேம்பாலம், திருச்சி சாலை மேம்பாலம், உக்கடம் மேம்பாலம் ஆகியவை இரவு 9 மணி முதல் மூடப்படும். வெளியூரிலிருந்து கோவை மாநகருக்கு வரும் எல்லைகளில் 11 இடங்களில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவு வரும் என்பதால் பிட்பாக்கெட், செயின் பறிப்பு குற்றவாளிகள் போலீசாரின் கண்காணிப்பில் இருப்பார்கள். கொடிசியா சந்திப்பு, உக்கடம், ஆத்துப்பாலம், ஆர் எஸ் புரம் உள்ளிட்ட இடங்களில் அதிவிரைவு படை போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
மேலும் புத்தாண்டு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 4 மாநகர காவல் துணை ஆணையர்கள், இரண்டு கூடுதல் துணை ஆணையர்கள், இரண்டு அணி தமிழ்நாடு சிறப்பு காவல் படையெனச் சுமார் 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாகப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும், மோட்டார் வாகன சட்டங்களைப் பின்பற்ற வேண்டும், அதே போலத் தனியார் கேளிக்கை விடுதிகளும் போலீசாரின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.