பொங்கலுக்கு பிறகு கூட்டணி மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தெரியும் – நயினார் நாகேந்திரன்
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசியவர், இன்று சென்னை வந்த பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகளோடு தேர்தல் கள நிலவரங்கள்குறித்து ஆலோசித்ததாகவும், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிகள் மற்றும் போட்டியிடும் தொகுதிகள்குறித்து தெரியவரும் எனக் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது,
பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் பியூஷ் கோயல் மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் காலையில் கமலாலயத்தில் கட்சி மூத்த நிர்வாகிகளைச் சந்தித்து தமிழ்நாட்டின் கள நிலவரம்குறித்து ஆலோசித்தனர்.
பின்னர், கூட்டணி கட்சி தலைவர் E.p.s – ஐ சந்தித்தோம். இதில், தொகுதி பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை. கள நிலவரம்குறித்து பேசினோம். தேர்தலுக்கு மக்கள் இன்னும் தயார் ஆகவில்லை எனச் சொன்னோம். இன்று ஓ.பி.எஸ், தினகரன் குறித்து எதுவும் பேசவில்லை.
தேர்தல் பொருத்தவரை தி.மு.க அகற்றப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். ஒத்த கருத்துக் கொண்டவர்கள் வர வேண்டும்.
டிடிவி தினகரன், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக் கொள்வாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்தவர், முன்பு, இந்திரா காந்திக்கு எதிராகக் கருப்பு கொடி போராட்டம், கல் எறிந்தார்கள். பின்னர் சேர்ந்து கொண்டார்கள். அதுபோல அரசியலில் நிரந்தர எதிரியென யாரும் இல்லை என்றார்.
விஜய் குறித்தான கேள்விக்கு, விஜய் குறித்து இன்று எதுவும் பேசவில்லை எனவும், வரும் தேர்தலில் விஜய் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்றார்.
தேர்தலுக்கு இன்னும் மூன்று மாத காலங்கள் உள்ளது, பொங்கலுக்குப் பிறகு கூட்டணி மற்றும் போட்டியிடும் தொகுதிகள்குறித்து தெரியவரும், தைப்பிறந்தால் வழி பிறக்கும் எனக் கூறினார்.