களத்தில் இல்லாதவர் விஜய் தான் – தமிழிசை செளந்தரராஜன்
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசு, நடிகர் விஜய் மற்றும் தி.மு.க-வின் செயல்பாடுகள்குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
நடிகர் விஜய் கோவையை “மஞ்சள் நகரம்” எனக் குறிப்பிட்டது குறித்துப் பேசிய தமிழிசை, “மஞ்சள் நகர அடையாளத்தை விஜய் இப்போது முன்வைக்கிறார். ஆனால், மஞ்சளுக்கான தனி வாரியத்தை அமைத்துக் கொடுத்தது மத்திய பா.ஜ.க அரசுதான். எனவே, அந்த மக்கள் பா.ஜ.க-விற்கே வாக்களிக்க வேண்டும். விஜய் 10 வயதிலிருந்து மக்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறுகிறார்; அப்படியென்றால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவையில் இருக்கும் எங்களுக்கு மக்களுடன் எந்தளவுக்குத் தொடர்பு இருக்கும் என்பதை அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்றார்.
ஈரோடு பரப்புரையின் பொழுது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் களத்தில் இல்லாதவர்கள் பற்றி பேச தேவை இல்லை என்று கூறியது தொடர்பான கேள்விக்கு, ஒருவேளை அவரைத்தான் அவரே குறிப்பிடுகிறாரோ? அவர்தான் களத்தில் இல்லை திடீரென காலத்திற்கு வருகிறார். திடீரென களத்திற்கு வருவதில்லை என சாடினார். அவர் எங்களை சொல்லவில்லை நாங்கள் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம் உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் இந்திய பிரதமர் தான் எங்களுக்கும் பிரதமராக வரவேண்டும் என கூறுகிறார்கள். தமிழ் நாட்டிலும் 18 சதவிகிதம் வாக்குகளை பெற்றுள்ளோம். தேர்தலில் நிற்கிறோம். அப்படி இருக்கும் பொழுது களத்தில் இல்லை என்றால் அவரைத்தான் கூறுகிறாரோ என தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக் கோரி நடந்த போராட்டத்தில் பூரண சந்திரன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்திற்குத் தமிழக முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என வலியுறுத்தினார். “இது மதப் பிரச்னை அல்ல, தமிழக அரசின் ‘ஈகோ’ பிரச்னை. இந்தப் போராட்டத்தில் துப்புரவுத் தொழிலாளர்களைக் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. மேலும், இந்த விவகாரத்தில் நீதிபதியைக் குற்றம் சாட்டுவது தவறான போக்கு” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அ.தி.மு.க தலைவர்கள் அடிக்கடி பா.ஜ.க தலைவர்களைச் சந்திப்பதால் நட்புதான் விரிவடையும், பிரச்சினை என எடுத்துக் கொள்ளக் கூடாது. தற்போது பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி வலுவாக உள்ளது. 2026-ல் தி.மு.க.வு.க்கும், அ.தி.மு.க.-பா.ஜ.க.வுக்கும் இடையேதான் போட்டியே. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். “தீயசக்தி தி.மு.க” என்பது சரித்திரத்தில் எழுதப்பட்ட உண்மை. அனைத்திற்கும் கருணாநிதி பெயரை வைப்பதை விடுத்து, சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை வைக்க வேண்டும்.
உதயநிதிக்கு எதுவும் புரிகிறதா என்று தெரியவில்லை; யாரோ எழுதித் தருவதை எதுகை, மோனையுடன் பேசி வருகிறார். நான் அனைத்து மதங்களுக்கும் ஆதரவானவள். ஆனால் ஒரு மதத்தைப் பாராட்டிவிட்டுப் பகவத் கீதையை எதிர்ப்பது தவறான செயல். மகாத்மா காந்தியைத் தி.மு.க முறையாகக் கொண்டாடவில்லை என்றும், அறிவாலயத்தில் தேசியக் கொடி கூட ஏற்றப்படுவதில்லை என்றும் அவர் சாடினார். காந்தி ஊழலற்றவர், ஆனால் அவர் பெயரிலான வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஊழல் செய்தது தமிழக தி.மு.க அரசுதான் என்றும் தமிழிசை குற்றம் சாட்டினார்.