சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம்: கோவையில் மட்டும் 20.17% வாக்களர்கள் நீக்கம்
கோவை மாவட்டத்தில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியல், 10 தொகுதிகளில் மொத்தம் 20.17 சதவீத வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி – விடுபட்டவர்களை கண்டறிந்து இணைக்க முடியுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் நிறைவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியலை அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலைக் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் வெளியிட அதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 25,74,608 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திறுத்தப்பணிக்கு முன் இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை 32,25,298 என இருந்தது. இதன் படி இறப்பு, இடமாற்றம், கண்டறியப்படவில்லையெனப் பல்வேறு காரணங்களால் சுமார் 6,50,590 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பின் கோவை மாவட்டத்தில் மட்டும் 20.17 சதவீத வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாகக் கோவை தெற்கு தொகுதியில் 26.98 சதவீதம், சிங்காநல்லூர் தொகுதியில் 25.47 சதவீதம், கவுண்டம்பாளையம் தொகுதியில் 24.71 சதவீதம், தொண்டாமுத்தூர் தொகுதியில் 21.87 சதவீதம், கிணத்துக்கடவு தொகுதியில் 20.51 சதவீதம், வால்பாறையில் 15.06 சதவீதம், பொள்ளாச்சி தொகுதியில் 14.33 சதவீதம், மேட்டுப்பாளையம் தொகுதியில் 13.99 சதவீதம், சூலூரில் 13.38 சதவீதம் என வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு பிறகு அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கருத்துகளைக் கேட்டறிந்தனர்.