அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் சுற்றும் தெருநாய்களை கட்டுப்படுத்த குழு!
கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அங்குச் சுற்றும் தெருநாய்களை கட்டுப்படுத்தும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களிலும் தெருநாய்கள் நுழைவதை தடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு உயர்கல்வித்துறை சார்பில் கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்த குழு அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்தக் குழுவினர் கல்வி நிறுவன வளாகத்தில் தெருநாய்கள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தெருநாய்களை கட்டுப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கல்லூரி முதல்வர் நோடல் அதிகாரியாக உள்ளார்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் எழிலி கூறும்போது: கல்லூரி வளாகத்தில் தெருநாய்கள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நோடல் ஆபிசர் தொலைபேசி எண்ணுடன் கூடிய தகவல் அறிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தற்போது கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் நாய்கள் தொல்லை இல்லை. மாணவர்களுக்குத் தெருநாய்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கல்லூரி வளாகத்தில் சுற்றிதிரியும் நாய்களுக்குச் சாப்பாடு வைக்கக் கூடாது.
மாணவர்கள் நாய்களின் அருகில் செல்ல வேண்டாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெரு நாய்களிடமிருந்து மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது என்றார்.