கோயம்புத்தூர்தமிழ்நாடு

சரஸ்வதி நாகரிக கருத்தரங்கு: முற்போக்கு இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவிப்பு

சரஸ்வதி நாகரிகம் என்ற வரலாற்று கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு முற்போக்கு இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் (அரசு உதவி பெறும் கல்லூரி) 19ஆம் தேதி தென்னிந்திய ஆய்வு மையம் மற்றும் கல்லூரி இணைந்து சரஸ்வதி நாகரிகம் என்ற தலைப்பில் வரலாற்று கருத்தரங்கு நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் கலந்து கொண்டு கருத்தரங்கைத் துவக்கி வைக்க் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்தக் கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்போக்கு இயக்கங்கள் முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர். சிந்து சமவெளி நாகரிகம் என்பதை சரஸ்வதி நாகரிகம் என்று திரித்து அந்தக் கருத்தரங்கு நிகழ்ச்சி நடத்துவதாகவும் இது வரலாற்று உண்மையை மறைக்கும் செயல் என்றும் முற்போக்கு இயக்கங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களைச் சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், வரலாற்றில் சிந்து சமவெளி நாகரிகம் என்பதே முதன்மையானது என்று வரலாற்று ஆய்வாளர் ஜான் மாக்சன் தெரிவித்திருந்த நிலையில் சரஸ்வதி நாகரிகம் என்ற ஒன்றே இல்லை, இந்த நிலையில் வரலாற்றைத் திருடும் வகையில் தென்னிந்திய ஆய்வு மையம் அந்தக் கருத்தரங்கை நடத்துவதாகக் குற்றம் சாட்டினார்.

தென்னிந்திய ஆய்வு மையம் என்றால் தென்னிந்திய மொழிகளில் தான் அந்தக் கருத்தரங்கம் நடத்தப்பட வேண்டும் என்றும், ஆனால் அந்தக் கருத்தரங்கில் ஹிந்தி சமஸ்கிருதம் ஆங்கிலம் என்ற மூன்று மொழிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்வை ஆளுநர் துவங்கி வைப்பது கண்டிக்கத்தக்கது என்றும் ஆளுநர் வழக்கமாகத் தமிழகத்தில் செல்லக்கூடிய அனைத்து கல்லூரிகளிலும் சரஸ்வதி நாகரிகம் சரஸ்வதி நதி என்று பொய்யான கருத்துரைகளைப் பரப்பி வருவதாக விமர்சித்தார்.

இந்தக் கருத்தரங்கம் நடைபெறுமேயானால் அதனைத் தடுக்கின்ற வகையில் கோவையில் உள்ள முற்போக்கு இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் ஒன்று கூடி அந்தக் கல்லூரிக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மறியலில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தார். தென்னிந்திய ஆய்வு மையம் ஆரிய நாகரிகத்தை முன்னிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குனராகத்தில் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்புகள் ஆளுநர்களை அழைத்தார்களா அல்லது ஆளுநரே வருகிறாரா என்று தெரியவில்லை ஆனால் ஆளுநர் வருவது என்பது அவருடைய பாதுகாப்பிற்காகவும் அந்தக் கருத்தைத் தமிழ்நாட்டில் திணிக்க வேண்டும் என்று மத்திய அரசின் துணையோடு வருவதற்காகவே ஆளுநர் வருவதாக விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!