கோவையில் பெண்ணுக்கு 100க்கும் மேற்பட்ட பார்சலை ஆபாச பெயரில் அனுப்பிய நபர் கைது!
கோவையில் தினமும் 100க்கும் மேற்பட்ட பார்சலை ஆபாச பெயரில் அனுப்பி பெண்ணுக்குத் தொல்லையளித்த முன்னாள் நிறுவன உரிமையாளரைச் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கோவை கணபதியை சேர்ந்தவர் 30 வயது பெண். இவர் கடந்த 2023ம் ஆண்டு புளியகுளத்தில் உள்ள டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தற்போது அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறிச் சொந்தமாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அவருக்குக் கேஸ் ஆன் டெலிவரி முறையில் தினமும் 100க்கும் மேற்பட்ட பார்சல் தனது பெயருடன் சேர்ந்து ஆபாச பெயரில் வந்துள்ளது.
தனக்கு வேண்டாதவர் யாரோ பார்சல் அனுப்பி வருவதை தெரிந்து கொண்ட அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் கடந்த ஏப் மாதம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஐபி முகவரியை வைத்து விசாரித்து வந்த நிலையில் அந்தப் பெண் ஏற்கனவே வேலை செய்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனி உரிமையாளரான கோவைப்புதூரை சேர்ந்த சதீஷ்குமார் (39) என்பவர் பார்சல் அனுப்பி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் அவர், அந்த பெண்ணின் பேருடன் சேர்த்து ஆபாசமான வார்த்தைகளை புனைப்பெயராக சேர்த்து பெண் முகவரிக்கு பார்சல் அனுப்பி தொந்தரவு கொடுத்து டார்ச்சர் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் சதீஷ்குமார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தனது நிறுவனத்தில் பணியாற்றி தனக்கு போட்டியாக வருவதை விரும்பாத சதீஷ்குமார் ஆபாசமான வார்த்தையை சேர்த்து தினமும் பார்சல் அனுப்பிய சம்பவம் பரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.