கோவையில் வட மாநில இளைஞர் கொலை – சிறுவன் உட்பட 6 பேர் கைது.
கோவை மலுமிச்சம்பட்டி அருகே வடமாநில இளைஞரை மது போதையில் கத்தியால் குத்தி கொலை செய்த 16 வயது சிறுவன் உட்பட ஆறு பேரைப் போலீசார் கைது செய்தனர்.
பீகார் மாநிலம் மத்திபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஸ் பஸ்வான் மகன் ராகேஷ் குமார் (20), இவர் தனது சகோதரர்களுடன் கடந்த ஓராண்டாகக் கோவை மலுமிச்சம்பட்டி கணபதி நகர் பகுதியில் தங்கி, மலுமிச்சம்பட்டி சிட்கோவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ராகேஷ்குமார் தனது அறையில் சக நண்பர்களுடன் அமர்ந்து மது குடித்துவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது அறையில் இருந்த இருவர் வாக்குவாதம் செய்து சண்டையிட்டபோது ராகேஷ் குமாரின் உணவு தட்டைத் தள்ளி விட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராகேஷ் குமார் தள்ளிவிட்ட நபர்களைத் தகாத வார்த்தைகளால் பேசித் திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் ராகேஷ் குமாரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
தொடர்ந்து ராஜா குமார் என்பவர் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ராகேஷ்குமார் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்குத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராகேஷ் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாகத் நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகத் தகவலறிந்துது வந்த செட்டிபாளையம் போலீசார் ராகேஷ் குமாரின் அறையில் இருந்த நபர்களைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜா குமார் (20), நகுல் மண்டல் (48), பிகேஷ் குமார் (19), அவ்தேஷ் குமார் மண்டல் (28), ரவிக்குமார் (24), மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், ஆறு பேரும் சேர்ந்து ராகேஷ் குமாரை கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராகேஷ் குமார், சாப்பாடு செய்துவிட்டு சாம்பார் வைக்காததால் ராஜா குமார் உள்ளிட்டோர் ராகேஷ் குமாருடன் தகராறு ஈடுபட்டு முன்விரோதம் இருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் தான் மது போதையில் ராகேஷ் குமாரின் உணவைத் தட்டிவிட்டதோடு அவரைக் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவன் உட்பட ஆறு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.