அரசியல்இந்தியா

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றம்: புதிய மசோதா தாக்கல்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரை மாற்றும் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், காந்தியின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் 2 மணிவரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்துக்கு மாற்றாக ‘வளா்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்ட’ (The Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) – VB GRAM G) மசோதாவை மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்தப் புதிய மசோதாவின்படி பெயர் மாற்றப்பட்டதுடன், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டமாக மாற்றப்பட உள்ளது. மேலும் மத்திய அரசு இதற்கு முழுவதுமாக நிதி அளித்து வரும் நிலையில், இனி மாநில அரசு 40% நிதி வழங்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வேளாண் பருவ காலங்களில் விவசாயப் பணிகள் உச்சகட்டத்தில் இருக்கும்போது, அந்தப் பணிகளுக்குப் போதிய அளவு விவசாயத் தொழிலாளா்கள் கிடைக்க வசதியாக, அந்தக் காலத்தில் 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், எந்தப் பணியும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகுபடி மற்றும் அறுவடையின்போது பணிகள் உச்சகட்டத்தில் மும்முரமாக நடைபெறக்கூடிய காலத்தை மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள் 40% நிதி அளிக்க வேண்டும்

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நூறு சதவீதம் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய மசோதாவின்படி 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நிதிச் சுமையை மாநிலங்களுடன் மத்திய அரசு பகிா்ந்துகொள்ளும். அதன்படி, சட்டப்பேரவைகள் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அந்தத் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 60 சதவீதத்தையும், மாநில அரசுகள் 40 சதவீதத்தையும் அளிக்க வேண்டும். அதேவேளையில் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலைப் பகுதியில் உள்ள மாநிலங்களில் அந்தத் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 90 சதவீதத்தையும், மாநில அரசுகள் 10 சதவீதத்தையும் வழங்க வேண்டும்.

‘வளா்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்பு’ சட்டம் அமலுக்கு வந்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள், அந்தச் சட்டப் பிரிவுகளுக்கு ஏற்ப மாநிலங்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!