இ-பைலிங் முறை: வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு தபால் அனுப்பும் போராட்டம்.
போதிய கட்டமைப்புகளை ஏற்படுத்தி முறைபடுத்தும் வரை இ-பைலிங் முறையை நிறுத்தி வைக்கக் கோரி கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்குத் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்றங்களில் போதிய ஊழியர்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல் இ-பைலிங் முறையை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகக் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் ஜேக் அமைப்பினர் இணைந்து இ-பைலிங் முறையை நிறுத்தக் கோரிக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையத்திலிருந்து உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தத் தபாலில் இ-பைலிங் முறையால் ஏற்படும் பாதிப்பு என்ன என்பது குறித்து தெளிவாகக் குறிப்பிட்டதாகவும், உடனடியாகக் கட்டமைப்புகளைச் சீரமைக்கும்ம் வரை இந்தப் புதிய நடைமுறையைச் செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தினர்.
இதுகுறித்து வழக்கறிஞர் திருஞானசம்மந்தம் கூறும்போது: இ-பைலிங் முறையை நிறுத்தக் கோரி கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் ஜேக் அமைப்பினர் இணைந்து தொடர்ந்து போராடி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வழக்கறிஞர்கள் ஊர்வலமாகச் சென்று உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இ-பைலிங் முறையில் உள்ள பிரச்சனைகள் விரிவாக விவரித்துக் கடிதம் ஒன்று அனுப்பினோம்.
வழக்கறிஞர்கள் இ-பைலிங் முறைக்கு எதிரானவர்கள் அல்ல, இந்த முறையில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் கலைய வேண்டும் என்பதே மட்டுமே ஒரே நோக்கம். குறிப்பாகக் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மட்டுமே சுமார் 300 ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.
இந்த நிலையில் புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்தால், வழக்காடிகளுக்கு, வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றத்திற்கும் சிக்கல் எனத் தெளிவாக மனுவில் கூறியுள்ளோம். இந்த மனுவைத் தான்ன் அஞ்சல் அலுவலகத்திலிருந்து அனுப்புகிறோம் என்றார்.