கோவை: பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு நலவாரியத்திலிருந்து பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே சிஐடியு கோவை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு, நலவாரியம் சார்பில் பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.1200 ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கோவை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர், கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாகத் தமிழ்நாடு அரசு கட்டுமான தொழிலாளர்களின் கோரிக்கைகள்மீதுஉரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன கோசங்களை எழுப்பினர்.
இதுகுறித்து பேசிய கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் மனோகரன் கூறும்போது: தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில், கட்டுமான தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழர் பண்டிகையான பொங்கல் விழாவைப் பணிக்குச் செல்லாமல் கொண்டாட வேண்டும் என்றால் சாதாரனமாக விஷயம் அல்ல. ஓரளவுக்காகவும் பணம் இல்லை என்றால் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும், எனவே கட்டுமான தொழிலாளர்களுக்கு நல வாரியத்திலிருந்து பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் கட்டாயமாக வழங்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கை.
மேலும் கட்டுமான தொழிலாளர்களுக்கும் 60 வயதை தாண்டினால் பென்ஷென் என்பது உள்ளது, இதுவரை ஆயிரம் வழங்கப்பட்டது, வாரியத்தலைவர் ரூ.2 ஆயிரம் உயர்த்தி தருவோம் எனக் கூறியிருந்தார், ஆனால் நீண்ட போராட்டத்திற்கு பின் வெரும் ரூ.200 மட்டுமே உயர்த்தப்பட்டது இது நியாயம் இல்லை. இதனை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், திருமண உதவி, கல்வி உதவி விலை வாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும், வாரிய பணத்தை தொழிலாளர்களுக்குச் செலவு செய்ய வேண்டும், அதிகாரிகளுக்கு வாகனம், புதிய கட்டிடம் எனத் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றார்.