16வது முறையாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 16 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் அறை உட்பட அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். மின்னஞல் அனுப்பும் மர்ம நபரைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட நகரின் முக்கிய பகுதிகளுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதும், அதிகாரிகள் சோதனை நடத்துவதும் தொடர்ந்து வருகிறது. கோவையில் உள்ள கல்வி நிறுவனங்கள் , நட்சத்திர விடுதிகள், விமான நிலையம், ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எனத் தொடர்ச்சியாகப் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ச்சியாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களில் மட்டும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 15 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 16 வது முறையாக மீண்டும் மின்னஞல் மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸ் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறை மற்றும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம் என அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் எந்தப் பொருட்களும் கைப்பற்ற படவில்லை. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்துள்ளது. தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் விஷமிகளைப் பிடிக்க முடியாமல் கோவை மாநகர காவல்துறையினர் திணறி வருகின்றனர்.