திரைத்துறையில் பாடகர்களின் எண்ணிக்கை மெதுவாகக் குறைந்து வருகிறது – பாடகர் கிரிஷ்
இசைத்துறையில் தொழில் நுட்ப ரீதியாகப் பிரபலமானவர்களின் குரல்களைப் பயன்படுத்துவதற்கு விதிமுறைகள் அவசியம் எனவும், திரைத்துறையில் பாடகர்களின் எண்ணிக்கை மெதுவாகக் குறைந்து வருவதாக கோவையில் பிரபல பாடகர் கிரிஷ் பேட்டியளித்துள்ளார்.
தமிழ் திரைப்படங்களில் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, அனிருத் போன்ற இளம் இசைமைப்பாளர்களின் இசையில் பாடி, பிரபலமான கிரிஷ் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இருக்கிறார்.
பாடகர், நடிகர், இசையமைப்பாளர் எனத் திரைத்துறையில் பன்முகங்களை கொண்டவர் எனக் கூறப்படும் பாடகர் கிரிஷ் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்..
கோவையில் லைவ் இன் கான்செர்ட் நிகழ்ச்சிகளை ரசிக்க ரசிகர்கள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்த அவர், வரும் புத்தாண்டில் புரோசோன் வணிக வளாகத்தில் நடைபெற உள்ள நம்ம கோவை நிகழ்ச்சியில் தாம் கலந்து கொண்டு பாட உள்ளதாகத் தெரிவித்தார்..
தற்போது பாடகர்கள் வெகுவாகக் குறைந்து வருவதாகக் கூறிய அவர், படங்களிலும் பாடல்களைவிடப் பின்னிசை கோர்வுகளை ரசிகர்கள் ரசிப்பதாகக் கூறினார். ராம்ப் வகை பாடல்கள் அதிகரித்து இருந்தாலும் அதுவும் இசையின் ஒரு வகைதானேயெனக் கூறிய அவர், ஆனால் அதில் தெளிவான தமிழ் சொற்களைப் பயன்படுத்துவது தம்மை வியப்பில் ஆழ்த்துவதாகக் கூறினார்.
இசைத்துறையில் தொழில் நுட்பங்களின் வரவு ஆரோக்கியம் என்றாலும், பெரும் ஜாம்பவான்களின் குரல்களைத் தொழில் நுட்பங்களிலும் பயன்படுத்துவதற்கு சில விதமுறைகளை பின்பற்றுவது அவசியம் இருப்பதாக அவர் கூறினார்…
பாடல்களைப் பாடும் புதிய பாடகர்களுக்குத் தற்போது திரைப்படம் மட்டுமே வாய்ப்புகள் என்று இல்லாமல் தற்போது சமூக வலைதள பக்கங்களிலும் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார்.