கோவை: தடுப்பணையில் செத்து மிதந்த மீன்கள்
கோவை மதுக்கரை போடிபாளையம் தடுப்பணை நீரில் மீன்கள் செத்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கோவை ஈச்சனாரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைக்காலங்களில் பெறப்படும் நீர், ஓடையாக மதுக்கரை, போடிபாளையம் வழியாகச் சென்று மஞ்ச பள்ளம் ஆற்றில் கலக்கிறது. இதில் போடிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையில் தேக்கி வைக்கப்படும் நீர் சுற்று வட்டார விவசாயிகளுக்கு முக்கிய பாசன நீராகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தடுப்பணையில் இருந்த மீன்கள் கடந்த இரண்டு நாட்களாகச் செத்து மிதப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது : தடுப்பணை அருகே கட்டப்பட்டுள்ள புதிய தனியார் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வெளியேறும், கழிவு நீர் முழுமையாக இந்த ஓடையில் கலக்கிறது. இதன் காரணமாகவே நீர் மாசடைந்து மீன்களும் இறந்திருக்கும், எனவே குடியிருப்புக் கழிவுகளை நேரடியாக நீர் நிலைகளில் கலக்க அனுமதிக்க கூடாது எனத் தெரிவித்தனர்.