இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மீண்டும் பரோல் வழங்கக் கோரிக்கை!
25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்து பரோலில் வெளிவந்து நன்னடத்தையுடன் வாழ்ந்து வந்த 22 இஸ்லாமிய சிறைவாசிகளின் பரோல் தற்போது ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது குறித்து அவரகோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர் பேசுகையில்,
“2022-ல் அண்ணா பிறந்தநாளையொட்டி பலர் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த 22 பேருக்கு மட்டும் விடுதலை மறுக்கப்பட்டது. பின்னர் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதும் நீதியரசர் ஆதிநாதன் குழு பரிந்துரையின்படி இவர்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை பரோல் நீட்டிக்கப்பட்டது. ஆனால் தற்போது நீதியரசர்கள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வில் பரோல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பரோலில் வெளிவந்து நன்னடத்தையுடன் குடும்பத்தைப் பார்த்து வந்த இவர்கள் மீண்டும் சிறைக்குச் சென்றதால் குடும்பங்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளன. எனவே மனிதாபிமான அடிப்படையில் இவர்களுக்கு மீண்டும் பரோல் வழங்கவோ அல்லது கருணை அடிப்படையில் விடுதலை செய்யவோ தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், சிறைவாசிகளைச் சந்திக்க வரும் குடும்பத்தினர் அடிப்படைப் பொருட்களுடன் செல்லும்போது இடையூறு ஏற்படுவதாகவும், காத்திருப்பு அறைகளில் போதிய வசதிகள் இல்லாததாகவும் தெரிவித்த அவர், இதனை உளவுத்துறை அதிகாரிகள்மூலம் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் கோரினார்.
சிறைவாசிகளின் குடும்பத்தினர் பேசுகையில், “இவர்கள் பரோலில் வந்து தினக்கூலி வேலை செய்து குடும்பத்தை நிமிர்த்தினார்கள். இப்போது மீண்டும் சிறைக்குப் போனதால் குடும்பம் தத்தளிக்கிறது. அவர்களுக்கு வயதும் ஆகிவிட்டது. அரசு உடனே தலையிட்டு விடுவிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.