கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆரம்பம்…
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பார்க் எலன்சா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு ஆடிப்பாடி கொண்டாடினர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் பிரத்யேக கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பார்க் எலன்சா நட்சத்திர விடுதியில் கேக் கலவை உருவாக்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக விடுதி அரங்கில் அதன் மேலாண் இயக்குநர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவப்பு உடையில் வண்ணமயமாகத் தலையில் கிறிஸ்துமஸ் தொப்பி அணிந்த பெண்கள் திரளாகக் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
அவர்களுக்கென இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் திறன் போட்டிகளும் நடைபெற அதில் ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்த பெண்கள் பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மேஜையில் சுமார் 100 கிலோ எடையில் முந்திரி, உலர் திராட்சை, பாதாம்,பிஸ்தா, வால்நட்,செர்ரி, அத்திப்பழம் உட்பட பல்வேறு உலர் பழங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சூழலில் குடுவையில் வைக்கப்பட்டிருந்த மதுபானத்தை கையிலேந்தி நடனமாடியபடியே அதனை உலர் பழங்களில் ஊற்ற மற்ற பெண்களும் தங்கள் பங்கிற்கு லிட்டர் கணக்கில் பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின் போன்ற மதுபானங்களை ஊற்றி கேக் தயாரிப்பதற்கான கலவையை உருவாக்கினர்.
16 வது ஆண்டாக இந்த கேக் மிக்சிங் விழா தங்கள் விடுதியில் கொண்டாடப்படுவதாக விடுதி நிர்வாகத்தினர் கூற, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பெண்கள் அனைவரும் திரண்டு இந்த கேக் கலவையை உருவாக்கியது சிறப்பான ஒன்று எனவும் அதில் பங்கேற்ற பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.