கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவரைக் கண்டித்து, தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தினமும் ஏராளமான புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவமனை பணியாளர்கள், காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்களை, மருத்துவமனையின் இருப்பிடம் மருத்துவர் தொடர்ந்து மிரட்டுவதாகவும், தங்களிடம் ஒப்பந்த நிறுவனம் மட்டுமே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, சுமார் 30க்கும் மேற்பட்ட ஒப்பந்த மருத்துவ பணியாளர்கள் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில தினங்களாக நடந்து வரும் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை இந்தப் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை ஊழியர் ஸ்ரீவித்யா கூறும்போது: நாங்கள் கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். எங்களது பொருப்பாளர்கள் தான் எங்களைப் பேச வேண்டும், இருப்பிட மருத்துவர் எங்களிடம் பேசக் கூடாது. தொடர்ந்து எங்களை அவர் கொடுமைபடுத்துகிறார். ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் பணி நீக்கம் செய்கிறார்.
எங்களிடம் ஒரு மாதிரியும், நிர்வாகத்திடம் வேறு மாதிரி பேசுகிறார். பணி நெருக்கடி, மன அழுத்தம் கொடுக்கின்றனர் கொரோனா காலத்திலிருந்து கடுமையாகப் பணியாற்றுகிறோம். தொடர்ந்து இருப்பிட மருத்துவர் எங்களைத் தொல்லை செய்கிறார். அடிக்கடி அழைத்துப் போலீசில் பிடித்துக் கொடுப்பேன் எனக் கூறி மிரட்டுகிறார். மேலும் நோயாளிகளின் உறவினர்கள் அவர்களாவே கொடுக்கும் பணத்தை காரணம் காட்டி வேலை நீக்கம் செய்கிறார்.
இருப்பிட மருத்துவர் எங்களை வீட்டிற்கு வேலைக்குப் பயன்படுத்துகிறார். எங்கள் நிறுவனத்தார் மட்டுமே எங்களுக்கு உத்தரவிட வேண்டும். இருப்பிட மருத்துவர் தலையிடக் கூடாது இதனை வலியுறுத்தித் தான் உள்ளிறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தீர்வு கிட்டும் வரை போராட்டம் தொடரும் என்றார்.